Wednesday, February 2, 2011

பெண் பார்க்கும் படலம்


மனித குலத்தின் வாழ்வின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவது...
பெண்பார்க்கும் படலம்

     ஏனென்றால், கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று முன்னோர்க்கும் முன்னோரே சொல்லி வைத்து, அதன் விதையிடல் நிகழ்வாக இந்த பெண் பார்க்கும் படலத்தினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி நாம் நிகழ்த்தி வருகின்றோம்.  பெண்ணை மட்டுமல்லாது, பெண்ணின் குடும்பப் புலம், வசதி, பெண்ணின் நிறம், படிப்பு,  குணம், நிறம் என்று எல்லா அம்சங்களையும் நுகர்ந்தறிந்து அதில் சிறந்தவற்றையே தேர்வு செய்வோம். 
     நான் என் மனைவியை அவளைத் திருமணம் செய்யும் முன்பே அதாவது சின்ன வயதிலேயே, குறிப்பாக அதாவது அவள் ஒன்றரை வயதிலேயே பார்த்து விட்டேன்.  பள்ளி விடுமுறையின் போது அம்மா பெரும்பாலும் மாமா வீடுகளுக்குத் தான் அனுப்புவாள்.  அப்படி ஒரு முறை நான் இரண்டாம் வகுப்பு  விடுமுறை காலத்தில் என் வாத்தியார் மாமா வீட்டிற்கு போயிருந்தேன். அப்போது தான் என் இப்போதைய பிரியத்திற்குரிய மனைவியை பார்த்தேன்.  அப்போது எனக்கு தெரியாது, எதிர்காலத்தில் இவள் தான் எனக்கு மனைவியாகப் போகிறாள் என்று. வீட்டு வாசலில் மணல் பரப்பில் வெறும் கால்சட்டை மட்டும் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.  அது தான் நான் அவளை முதன்முதலாக பார்த்த கோலம்.  அது தான் எனக்கான பெண் பார்க்கும் படலம் என்றே சொல்ல வேண்டும்.
      காலமாற்றத்தில், என் பதினோறாவது வயதில் என் தந்தையார் இறந்து போக, என் அம்மா என்னையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு பிழைப்பிற்காக என் வாத்தியார் மாமாவின் ஊருக்கே அழைத்துச் சென்றாள்.  அதன்பிறகு, என் மாமா பிள்ளைகள், நாங்களுமாக உறவும் நட்புமாக, அன்பும் அரவணைப்புமாக வளர்ந்தோம்.
       பருவ மாற்றத்தில்,   என் மாமாவின் மூன்று மகள்களுள் இரண்டாவதான இப்போதைய என் மனைவியை எனக்கு மிகவும் பிடித்துப் போக அவளுக்கும் என்னை பிடித்துப் போக,  அந்தப் பிடிப்பே எங்களுள் பாசவலை காதல் வலையாக உருவெடுத்து கட்டுண்டு, நாங்கள் தீவிர காதலர்களாகி, அது எங்கள் இல்லத்தார்க்கும் தெரிந்து, பின்னர் திருமணம் வரை சென்றது.  ஆனால், நான் சொல்ல வந்த விசயம் இதுவன்று.
         இப்போது, என் மனைவியின் தம்பி, அதாவது என் மைத்துனனுக்கு பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதன்பொருட்டு, நாங்கள்  திருமண ஏற்பாட்டாளர் உதவியோடு ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.  அப்படியொரு தருணத்தில் காரைக்குடியில் முதல் பெண்ணை பார்த்தோம்.
     பெண் பார்க்கும் படலத்தினை நானும் என் மனைவியும் அநேகமாக திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பார்த்தது தான்.
          காரைக்குடியில் அந்த வீட்டிற்கு நல்ல நேரம் பார்த்து போனோம்.  பெண் வீட்டார் அனைவருமே வாசலில் நின்று புன்னகை தவழ எங்களை வரவேற்றனர்.
           காரைக்குடியில் வீடுகளைப் பற்றி வாசகர்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை.  இரண்டு தெருக்களை குறுக்காக இணைக்கும் அளவிற்கு அத்தனை பெரிய வீடு.

     முற்றத்திற்கு அருகே நீண்ட வராண்டாவில் பாய், ஜமக்காளம் விரித்து வைத்திருந்தனர்.  அதனருகிலேயே இரண்டு நாற்காலிகள்.  ஒன்று மாப்பிள்ளை அமரவும், மற்றொன்று மாப்பிள்ளையின் தாய்மாமன் அமரவும் என்பதை பின்னர் புரிந்து கொண்டேன்.  ஆனால், மாப்பிள்ளைக்கு மைத்துனனாக நானும், அவனுடைய தாய்மாமனும் சென்றதினால் அந்த இரண்டு நாற்காலிகளில் மூவர் அமர இயலாதல்லவா? அதனால், மாப்பிள்ளை கீழே ஜமக்காளத்தில் அமர்ந்து விட்டான்.
     அப்புரமென்ன, நானும் தாய் மாமனும் நாற்காலிகளில் அமர்ந்தோம்.  இந்த இடத்தில் தான் வில்லங்கம் ஆரம்பித்தது.  என் மனைவி என்னை குறுகுறுவென பார்த்து சிரித்தாள்.  அவள் சிரிப்பில், பெண் வீட்டாரோ அல்லது பெண்ணோ கூட தவறுதலாக என்னை மாப்பிள்ளை (என்னவொரு ஆசைடா) என்று நினைத்து விடக் கூடுமோ என்பது போல இருந்தது அவளது நமட்டுச் சிரிப்பு ( மாயி என்ற திரைப்படத்தில் வடிவேலு, சரத்குமார் பெண் பார்க்கும் படலம் ஞாபகமிருக்கிறதா வாசகர்களே?)
     இது ஏதடா வம்பாய் போச்சே என்று, நான் நாற்காலியை தள்ளி விட்டு, கீழே அமர்ந்து விட்டேன்.  அப்போதும் எனக்கு மாப்பிள்ளை பக்கத்தில் அமர கொஞ்சம் யோசனையாக தானிருந்தது.  மாயி கதையாகிவிடக் கூடாதல்லவா? ஏனென்றால், மாப்பிள்ளை போலவே நானும் பாண்ட், சட்டை போட்டு மாப்பிள்ளை தொணியில் தெரிந்தேனாக்கும்(??) அப்புரம், தாய்மாமனும் நாற்காலி வேண்டாமென்று கீழே அமர்ந்து விட்டார்.  என்னைவிட  வயதானவரான தாய்மாமனை மாப்பிள்ளை பக்கத்தில் தள்ளி விட்டேன்.  யார் மாப்பிள்ளை என்ற குழப்பம் குறிப்பாக பெண்ணுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் நான் உஷாராகவே இருந்தேன் என்பதை வாசகர்களுக்கு குறிப்பிட விரும்புகிறேன்.  (பாராட்டக் கூடாதா?)  
     முதலில் பெண் வீட்டாருடன் அறிமுகப் படலம் நடந்தேறியது.  பெண்களை எங்கள் வீட்டுப் பெண்டிருக்கும், ஆண்களை எங்களுக்குமாக அறிமுகம் செய்து வைத்தார்கள்.  முதலில், எங்களுக்கு ஒரு பெண் தண்ணீர் கொடுத்தார்.  அவர்  நாங்கள் பார்க்க வந்த பெண் இல்லை என்பதை, அவர் அணிந்திருந்த மெட்டியை வைத்து தெரிந்து கொண்டேன்.  அதன்பின்னர், ஒரு நடுத்தர வயதுடைய பெண் காரசேவும், ஜாங்கிரியும் வைத்தார்.  ஜன்னலருகே சின்னஞ்சிறு வாண்டுகள் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.  மாப்பிள்ளை யாரென்று தேடினர் போலும். எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது, யாரும் 47 வயதான என்னை மாப்பிள்ளை என நினைத்து விடுவார்களோ என்று.  ஆனாலும்,  கொஞ்சம் நரைமுடி இருந்தாலும், என்னைவிட மாப்பிள்ளையான என் மைத்துனன் கொஞ்சம் கலராகவும், அழகாகவும் இருந்ததால், அப்படியொரு விபரீதம் நடந்து விடாது என்றும் மனதைத் தேற்றிக் கொண்டேன்.
     கொஞ்ச நேரத்தில் காபி வந்தது.  இப்போதும் ஒரு நடுத்தர வயது பெண் தான்.  எனக்கு ஒரு சந்தேகம் கடைசி வரை பெண்ணை கண்ணில் காட்டுவார்களா என்று.  மறுபடியும் மாயி படம் தான் ஞாபகத்திற்கு வந்தது, பெண் வீட்டார், வாம்மா மின்னல்ல்ல்... என்று அழைத்து, அந்தப் பெண்ணும் முற்றத்தில் மின்னல் மாதிரி பறந்து போய்விடுமோ என்று என்னை கொஞ்சம் பதறத் தான் செய்தது.

     அப்போது தான், அது நடந்தது...
     மெய்யாகவே பெண் வந்தாள்...
     மின்னல் மாதிரி அல்ல...

     எந்தக் காலத்திற்குமான பெண்மையின் அடையாளமாக...
     நாணத்தோடும், பயத்தோடும், காலசுழற்சியினால் விளைந்த இழப்பில் தான் அடைந்திருந்த களைப்போடும், விதிகளைச் சுமந்த விழிகளோடும் அந்த பெண் எங்கள் எதிரே வந்தாள்.
     இயல்பாகவே எனக்கிருந்த நகைச்சுவை உணர்வெல்லாம் அவள் முகத்தின் களைப்பில் கரைந்து போனது. எனக்கு மனம் கொஞ்சம் இறுகியது. எனக்கு நேர்ந்த மன உணர்வு தான் என் மனைவிக்கும் நேர்ந்ததாக பின்னர் சொன்னாள்.  அந்தப் பெண் வந்தமரும்போது, எனக்கு பாவமா இருந்துச்சுங்க... நாம அவளை ஒரு பார்வைப் பொருளாக வைத்துப் பார்க்கிறோமே... என்று கவலைப்பட்டாள்.
     இந்த கதையை கேள்விப்பட்ட என் நண்பர் ஒருவர் சொல்லும்போது, பெண் பார்க்கும் படலமா? அது ஒரு பகிங்கிர சைட் அடிக்கும் நிகழ்வு தானே என்றார்.  அப்போது தான் எனக்கு உரைத்தது.  சே... பெண்ணை திருமணம் செய்திட என்னவெல்லாம் செய்திட வேண்டியிருக்கிறது. 
     உண்மையில் அந்த சபையில் பெண்ணை அமர்த்தி, வேடிக்கைப் பொருளாக அனைவரும் பார்ப்பது நாகரிகமாக இருக்கிறதா என்பது குறித்து நான் மிகவும் யோசித்தேன்.  அந்த பெண்ணின் மனநிலைக்கு போய் யோசித்தேன்.  தான் கொஞ்சம் வயது கடந்த பெண் என்பதால், தனக்கு என்ன நேருமோ, இந்த மாப்பிள்ளை என்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்வாரோ, என் தாய் தந்தையர்க்கு பாரமாக இருப்பது இந்த தருணத்தோடு விலகுமோ என்றெல்லாம் அவள் நினைத்திருக்கக் கூடும்.
     மும்பையில் வேலைபார்த்து வந்த என் மைத்துனன், திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததால் கொஞ்சம் வயது கடந்த நிலையில், பெண் பார்க்கும் படலத்தை இப்படி அவசரகோலத்தில் நடத்தினோம்.  அதனால், பெண்ணின் புகைப்படம், ஜாதகம் போன்றவற்றை முன் கூட்டியே பார்த்து ஒத்து வந்தால் நேரில் போகலாம் என்ற முடிவிற்கு நாங்கள் சென்றிட இயலவில்லை. அதன் விளைவாகதான் இந்த மாதிரி நிகழ்விற்கு ஒரு பெண்ணை ஆளாக்கிட நேர்ந்தது.
     பெண் பார்க்கும் படலங்கள் எங்கும் நடைபெறும் நிகழ்வுகள் என்றாலும், இந்தகாலத்தில் கணனி மயம், மென்பொருள், இணையம் வழி தொடர்புகள் என்று பல வழிகளிலும்  பெண்கள் இயங்கி வந்தாலும் இப்படி நாணம், மடமை என்று தமிழ்ப்பெண்ணின் அடையாளமாக இருப்பது ஒருபுறம் ஆச்சரியம் என்றாலும் அது நம் கலாச்சாரம், பண்பாடுகளை காக்கும் விதமாக தமிழ்ப்பெண் இருக்கிறாள் என்பதைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும்.